Home arrow News arrow Navaraththiri Day memories - Sydney,Australia - By Kana Praba
Saturday, 04 February 2012
 
 
Navaraththiri Day memories - Sydney,Australia - By Kana Praba PDF Print E-mail
sydneyedu1.jpgஅந்த நவராத்திரி நாட்கள் - சிட்னி  - கானா பிரபா
"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயலட்டை வீடுகளில் சின்னனுகள் கத்திக் கத்திப் பாடமாக்கும் சத்தம் கேட்பது தான் நவராத்திரி வருவதற்கான முன்னோட்டம். ஒவ்வொரு ஆண்டு நவராத்திரிக்கும் முன் சொன்ன அடிகள் மாறாது பேச்சுப் போட்டி மனப்பாடம் இருக்கும் . அந்த சின்னப்பிள்ளைப் பருவத்தில் சுவாமிப் படத்துக்குச் சகலகலாவல்லி மாலை பாடினால் அவல் சுண்டல், கெளபி கிடைக்கும் என்பது தான் நவரத்திரி பற்றித் தெரிந்த ஒரே இலக்கணம் எமக்கு. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களுக்கான பண்டிகை என்றாலும் "சரஸ்வதி பூசை" என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும்sydneyedu1.jpg.
sydneyedu1.jpg  
















  




( இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் )

ஒரு விஜயதசமி நாளில் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சோமாஸ்கந்தக் குருக்களிடம் என் அப்பாவும் அம்மாவும் அருச்சனை செய்து தம்பி வாத்தியார் என் கை விரலைப் பற்றிப் பரப்பியிருந்த நெற்குவியலைத் துழாவி ஆனா எழுத அடியெடுத்துக்கொடுத்தது சின்னதாக இன்னும் என் ஞாபகத்திரையில். ( குழப்படி செய்யாம ஆனா எழுதினா, கோவால் மாமா கடையில ஸ்ரார் ரொபி வாங்கித்தருவேன் - இது என் அம்மா). பின்னர் தம்பி வாத்தியார் தந்த அந்த ஆனா ஆவன்னா ஏட்டுச் சுவடி எமது சுவாமி அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அச்சு பதியாமல் ஆணியால் எழுதியது போல் அந்த எழுத்துக்கள் இருக்கின்றன.

பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும். 

sydneyedu1.jpg



























(சிட்னி முருகன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் சிலை)

பள்ளிக்கூடங்கள் தொடங்கி ஊர்க் குறிச்சி வைரவர் கோயில் வரைக்கும் சரஸ்வதி பூசைக் காலத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்கள் அயல் வைரவர் கோயிலில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்றுப்பக்க வீடுகளுக்கும், வசதி குறைந்த குடும்பங்களை ஒன்றாக இணைத்து ஒருபூசையுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு நாளும் அவல், சுண்டல் கெளபி என்று விதவிதமான பண்டங்கள், சில குடும்பங்கள் தங்கள் பவிசை (வெளிநாட்டுக் காசு) நைவேத்தியத்தில் காட்டுவார்கள். அவர்களில் படையலில் மோதகத்துக்குள் கற்கண்டும் கடிபடும்.

கார்த்திகேசு அண்ணற்றை பெடிச்சியளும் , அங்கால சிவலிங்க மாமா, திருச்செல்வண்ணையின்ர பெடிச்சியளும் தான் வைரவர் கோயிலின் ஆஸ்தான சகலகலா வல்லி மாலைப் பாட்டுக்காறர். கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க "சகலகலா வல்லியே" என்று முந்திக்கொண்டே எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-)விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்).


sydneyedu1.jpg





















(சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் வீற்றிருக்கும் லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி விக்கிரகங்கள்(இடமிருந்து வலம்) )

சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். இணுவில் கந்தசுவாமி கோயில் முன் றோட்டில இருந்த வாணி கல்வி நிலையம் என்ற ரியூட்டறி நிர்வாகி பாலா ஒவ்வொரு வாணி விழாவிற்கும் அருணா கோஷ்டி மெல்லிசைக் குழுவைக் கொண்டு வருவார்.
" எட உங்கற்றா பாலசுப்பிறமணியம் போலப் பாடுறான்" என்று அவர்களை வாய்பிளக்கப் பார்த்த காலம் அது. பாலா வெளிநாடு போன கையோட வாணி கல்வி நிலையம் எவரெஸ்ட் என்று மாறவும் அருணா கோஷ்டிக்கும் ஆப்பு.
என்னதான் சொல்லுங்கோ, அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா சோக்கானது எண்டு தான் சொல்லவேணும். ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. "விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா" என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து "என்னடா உடுப்பிது" என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.

அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு
படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.

பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா " எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.

எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு "விதுரன் கதை" நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.
பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு " அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் " என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.

O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.

sydneyedu1.jpg





















பள்ளிக்கூடங்களிப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இறுதியில் பெரிய வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு போட்டு விஜயதசமி நாளைக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் அரைச் சாறி (Half Saree)கட்டுவதும் இந்த நாட்களில் தான். ரவிச்சந்திரனுடன் எமது வகுப்புப் பூசைக்காக ஈச்சம் பத்தை தேடியலைந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு காலம்.

எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது. எமது பாடசாலையின் மூன்றாம் மாடி சரஸ்வதி பூசைக்கான இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாடிக்குப் போகும் இரண்டாம் மாடிப் படியோரமாக எமது வகுப்பு இருந்தது. காலையில் இரண்டுபாட ஆசிரியர்கள் லீவு. எம்மைத் தட்டிக்கேட்க ஆளில்லை. நானும் மஞ்சவனப்பதி கோயிலடி ராசனும் (இப்ப இவன் கனடாவிலையாம்) , வளர்மதி ரெக்ஸ்ரைல்ஸ் மதியாபரணத்தின்ர பெடியன் விக்கியும் ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(வயசுக்கோளாறு). வழக்கம் போல ராசனின் வாய் சும்மா இருக்காமல் ஒருத்தியைப் பார்த்துக் கிண்டல் அடித்ததும் அவள் பழிப்புக் காட்டிக்கொண்டே விறுவிறுவென்று மாடிப் படியில் ஏறவும், முதல் நால் மழைவெள்ளம் தேங்கிய படிக்கட்டில் வழுக்கி அவள் விழவும், வெள்ளை சட்டை காக்கிச் சட்டையாகத் தொப்பமானதும், விழுந்தடித்துக்கொண்டே வாங்கினை உள்ளே போட்டு எதுவும் தெரியாதது மாதிரி இருந்ததும் கூட மறக்கமுடியுமா? (இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது).

அதே ஆண்டு எங்கள் வகுப்பு லோகேந்திரன் ஆட்கள் நாடகம் போட்டார்கள். (சமூக நாடகமாம்) லோகேந்திரன் போட்ட பெண் வேடத்திற்கு எதிராக இதுவரை மானநஷ்டவழக்கு எதுவும் வரவில்லை. அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது. விஜயதசமி மேடையில் "தென்னக்கீற்றில் தென்றல் வந்து மோதும் " என்ற எழுச்சிப் பாடலை ராஜசேகரும் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து இறக்குமதி செய்த பெண்ணுமாகப் புன்முறுவலோடு பாடவும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கோகுலகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடல் முடியும் போது மேடையில் ஏறி ராஜசேகருக்கு மாலை போட்டதும் (செட்டப்போ தெரியேல்லை)
"இறங்குங்கடா மேடையை விட்டு" என்று உறுமியவாறே மகேந்திரன் மாஸ்டர் வந்ததும், அந்த விஜயதசமி நாட்களின் இறுதி அத்தியாயமாக அமைந்து விட்டது.

Courtesy:
கானா பிரபா - மடத்துவாசல் பிள்ளையாரடி - கழிந்த நிகழ்வுகளும்.... கழியாத நினைவுகளும்...!
http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_29.html

< Previous   Next >
Who's Online
We have 46 guests online
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

Attractions

Sydney Opera House

Harbour Bridge Climb

Sydney Olympic Park

Featherdale Wildlife Park

Scenic World

 
Top! Top!


Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com